19 January 2009

மதம் மாறினால் மரண தண்டனையா?

அஸ்ஸலாமு அலைக்கும்.
 
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவர் பிறகு இஸ்லாத்திலிருந்து வெளியேறி மாற்றுமதத்திற்கு சென்று விட்டால் அவரை கொல்ல வேண்டும் என்பது  சட்டமா...?  இது பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன..? என்றக் கேள்வியை ஏற்கனவே சகோதரர் ஹாரூன் கேட்டுள்ளார் எனவே இதுவே முதல் தலைப்பாகும்.  இன்றிலிருந்து 20 நாட்கள் இந்த தலைப்பு குறித்த கருத்தோட்டங்கள் தொடரலாம் இன்ஷா அல்லாஹ். 
 
உறுப்பினர்களின் எந்த கருத்தும் ஆதார அடிப்படையில் அமையட்டும்.  (மீண்டும் நினைவூட்டுகிறோம் பதிவுகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.)
 
ஜி என்

----------
From: நமக்குள் இஸ்லாம் Date: 2008/10/24

ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி பிற மதத்திற்கு சென்று விட்டால் அவரைக் கொள்ள வேண்டும் என்று அறிஞர்களில் ஒரு சாரார் கூறி வருகிறார்கள்.  ஸலஃபுகள் என்று அறியப்பட்ட முந்தைய அறிஞர்களில் பலரும் இந்த கருத்தைக் கொண்டுள்ளனர்.  அதற்கு ஆதாரமாக,
 
''எவர் தன் மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவரைக் கொன்று விடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி தமிழ் 3037, 6992.  என்ற நபிமொழியை முன் வைக்கின்றனர்  (இதே கருத்தில் இன்னும் சில நபிமொழிகளும் உள்ளன)
 
இந்த நபிமொழியை படிக்கும் எவரும் இஸ்லாத்தில் மனித உரிமை (இந்த விஷயத்தில்) இல்லை.  ஒருவர் ஒரு மதத்தை தேர்ந்தெடுப்பதும், விரும்பினால் அதை விட்டு விலகுவதும் அவரது சொந்த விருப்பமல்லவா...  கிறிஸ்த்தவத்திலிருந்து எவ்வளவோ நபர்கள் இஸ்லாத்திற்கு வருகிறார்கள்,  ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாத்தை தழுவுகிறார்கள் அவர்களையெல்லாம் அந்த மதங்கள் கொல்ல சொல்கின்றனவா...  அது மனித உரிமை என்று அந்த மதங்கள் கருதும் போது அது போன்ற ஒரு சகிப்புத் தன்மை ஏன் இஸ்லாத்தில் இல்லை. என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்  இது குறித்து ஆங்காங்கே விவாதங்களும் நடக்கின்றன.   
 
உண்மையில் மதம் மாறியவர்களை இஸ்லாம் கொல்ல சொல்கின்றதா..?  மேற்கண்ட நபிமொழியின் அர்த்தம் என்ன?   இது குறித்து நாம் விளக்கியாக வேண்டும்.    பதிவை துவங்குங்கள்.  தொடர்ச்சியாக எங்கள் கருத்து பதியப்படும்.
 
----------
From: Sultan Abbas Date: 2008/10/24

Assalaamu Alaikum

துவக்கம்....

இஸ்லாத்திலிருந்து வெளியேறுவது என்பது மனதளவிலோ, நாவினாலோ , அல்லது  செயல்கள் வழியாக  ஏற்படலாம்.

மனதளவில்: உதாரணமாக ஒருவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாது ஆகிவிடுவது, அல்லது அல்லாஹ்வை தவிர வேறு ஏதேனையும்...மனதளவில் வணங்குவது.

நாவினால்: அல்லாஹ்வையோ அல்லது தூதரயோ அல்லது இஸ்லாத்தையோ தன் நாவினால் கேவலபடுத்துவது அல்லது கலங்க படுத்துவது அல்லது இழிவுப்படுத்துவது.

செயல்களால்: உதாரணமாக சிலைகளுக்கு சுஜூது செய்வது, தொழுகையை வேண்டுமென்றே விடுவது போன்றவைகள்.

சரி...இவற்றில் ஏதேனும் ஒன்றில் விழுந்தவர் ....நிராகரித்தவர்
ஆகிவிடுகிறார். அப்போ...இவரது தலையை துண்டித்து விடலாமா?
----------

From: HAROON RASHEED Date: 2008/10/25

 

ஆம் ...

ஒரு தரம் இஸ்லாத்தை ஏற்று கலிமா மொழிந்த ஒருவர் (ஆணாகிலும் அது பெண்ணாகிலும் ) இஸ்லாத்தை விட்டு வெளியேறினால் அவர் முர்த்தத் என்று அழைக்கப் படுவார் அத்தகைய முர்தத்களை கொல்ல வேண்டும் என்று என்னுடைய சிறு பிராயத்தில் பயான்கள் கெட்ட சமயத்தில் கெட்ட ஓர்மை இருக்கிறது. அந்தக் காலத்தில் கேள்விகள் கேட்பது மிக வும் கண்டனத்துக்கு உரியதாக இருந்துவந்து.  இப்போதோ கேள்விகள் கேட்பதும் அது தொடர்பான விவாதங்கள் நிகழ்வதும் சாதாரணமாகிப் போய்விட்ட நிலை. இது வரவேற்கப்பட வேண்டிய தொன்று இதிலென்ன ஆச்சர்யம் என்றால் இப்போதெல்லாம் முஸ்லிம்கள் கேள்விகேட்டுக் கொண்டிருந்த நிலை மாறி மாற்று மத சகோதரர்கள் கேள்விகள் தொடுக்கும் காலமாக மாறி நிற்கிறது அந்த அளவுக்கு இஸ்லாம் அவர்களை சிந்திக்க வைத்துக் கொண்டும் தன்பால் ஈர்த்துக் கொண்டும் உள்ளதை த்தான் இது காட்டுகிறது என்பதும் உண்மை.

 

அதனால் அவர்களுக்கு பதில் சொல்ல முனைபவர்கள் இஸ்லாம் காட்டித்தரும் கொள்கை வழி  நின்று பதில் சொல்வதை விடுத்து தங்கள் மன இச்சை ப்படி பதிலளிப்பது தான் பலவகையில் குளறுபடிகளை உண்டாக்கி மேலும் பல கேள்விகளை கேட்க வைத்துவிடுகிறது.

உள்ளபடி எவர் குரான் சுன்னா வழி நின்று பதிலளிக்கிறார் என்பது புரிவதில்லை. 
 

உதாரணத்துக்கு இந்த கேள்வியை எடுத்துக் கொள்ளலாம்

மதம் மாறினால் கொல்லத்தான் வேண்டும் என்று சொல்லக் கூடிய ஒருபுறத்து மார்க்க அறிஞரும் இல்லை அப்படி அல்ல என்று  என்று சொல்லக் கூடிய ஒருபுறத்து மார்க்க அறிஞரும் எம்மை குழப்புவது ஏன் ....?!
 
சரியான நிலைதான் என்ன ?
எமக்கு இந்தக் கேள்விக்கு பதில் கிடைப்பதனூடே ஒரு விஷயத்தை மார்க்க அடிப்படையில் விளங்கிக் கொள்வதற்கான சரியான வழிகாட்டல் அவசியம் ... அடிப்படை சரியாக அமைந்துவிட்டால் எல்லாமே சரியாக வரும்.
பதில் தர முனைபவர்கள் தயவு செய்து கவனிப்பார்களாக

நன்றி நட்புடன் ஹாரூன்
----------
From: நமக்குள் இஸ்லாம் Date: 2008/10/26
 
மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..?
 
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறிவர்களை கொல்ல வேண்டும் என்பது இஸ்லாத்தின் பொதுவான விதியல்ல. ஹதீஸ்களில் வரும் வாசகங்களை மட்டும் கருத்தில் கொண்டு எந்த சட்டமும் வகுக்க முடியாது.  மேற்கொண்டு கிடைக்கும் ஆதாரங்களையெல்லாம் ஒன்று திரட்டி ஆய்வு செய்த பிறகே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
 
இந்த மார்க்கம் மனிதர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கக் கூடிய மார்க்கமாகும்.  மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக அனுப்பப்பட்டவர்களே நபிமார்கள்.  இந்த மார்க்கத்தை ஏற்றவர்களுக்கும், ஏற்காமல் மறுத்தவர்களுக்கும்,  அலட்சியப்படுத்தியவர்களுக்கும் பரிசோ, தண்டனையோ கொடுக்கும் உரிமை இறைவனைச் சார்ந்ததாகும்.  உலக வாழ்வில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள மனிதர்கள் மீது மத சட்டங்களை திணித்து அவர்களை கட்டுப்படுத்தும் படி இஸ்லாம் பணியவில்லை.   இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு தொடர்வோம்.
 
وَقُلِ الْحَقُّ مِن رَّبِّكُمْ فَمَن شَاء فَلْيُؤْمِن وَمَن شَاء فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا
(நபியே!) நீர் கூறுவீராக "இந்தச் சத்தியம் உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது" ஆகவே, விரும்புபவர் அதை ஏற்கட்டும், விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்;  (அல் குர்ஆன் 18:29)
 
இந்த வசனத்தில் மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை கவனிப்போம். சத்தியம் எடுத்து சொல்லப்படுகின்றது. விருப்பமிருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். விருப்பமில்லை என்றால் விட்டு விட்டுச் செல்லுங்கள். இதன் முடிவு மரணத்திற்கு பிறகே உங்களுக்குத் தெரியும் என்று இறைவன் தெளிவாக அறிவிக்கிறான்..
 
ஏற்பதும் நிராகரிப்பதும் ஒருவருடைய தனிப்பட்ட முடிவைப் பொருத்தது என்று ஆகி விட்ட பிறகு ஏற்று நிரைாகரித்தவர்களை கொல்ல வேண்டும் என்பது எப்படி இஸ்லாமிய சட்டமாக இருக்க முடியும்?
 
إِنَّ الَّذِينَ كَفَرُواْ بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُواْ كُفْرًا لَّن تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُوْلَـئِكَ هُمُ الضَّآلُّونَ
 
எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.  (3:90)
 
நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரிப்பவர்கள் பற்றிய எச்சரிக்கையில்,  இஸ்லாத்தை ஏற்ற பின் நீங்கள் நிராகரித்து விலகினால் அதன் பிறகு பவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தால் பிரயோஜனமில்லை என்ற அறிவுரையே இறைவன் முன் வைக்கிறானே தவிர அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறவில்லை.
 
إِنَّ الَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمْ كُفَّارٌ فَلَن يُقْبَلَ مِنْ أَحَدِهِم مِّلْءُ الأرْضِ ذَهَبًا وَلَوِ افْتَدَى بِهِ أُوْلَـئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ

 எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமிநிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.  (3:91)

நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரிப்பது பற்றி பேசும் தொடரிலேயே இறைவன் இந்த வசனத்தையும் முன் வைத்துள்ளான்.  ஈமான் கொண்டபின் நிராகரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றால் "நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ.."   என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.   எனவே இஸ்லாத்தை ஏற்று பிறகு மதம் மாறி போனவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை விளங்கலாம்.

இன்னும் பார்ப்போம் இறைவன் நாடட்டும்.

--
ஜி என்

----------
From: HAROON RASHEED Date: 2008/10/26

அருமை .....! இறைவனுக்குள்ள உரிமை அது என்பது மறுப்பதற்கில்லை ஆயினும்  அவை பேசுவது மறுமையில் பெறக்கூடிய விடயங்களை. நம்மில் இறந்து போய்விட்ட மனிதர் களுக்கானது என்பது தெளிவாகவே உள்ளதே ...!

 
உலகில் மாந்தர் சாந்தியுடன் வாழ்வதற்கு மார்க்கம் உண்டாக்கி வைத்திருக்கும் சட்டங்கள் குறைபாடுடையதாக போவதற்கு சாத்தியமில்லை

 

நீங்கள் குறிப்பிட்டுள்ள குரான் வசனங்கள் படிக்கையில் இறைவன் சித்தப் படுத்தி வைத்திருக்கும் தண்டனை கள் பற்றியும் அதிலிருந்து  அவர்கள் த்ப்ப இயலாது என்பதும் தெளிவு என்பதையும் வலியுறுத்தும.

 

உலகில் மனிதன் செய்யக் கூடிய தவறுகளுக்கு பல வகயான  தண்டனைகள் மார்க்கம் விதித்திருக்கிறது தானே...?

 

இறைவன் சித்தப் படுத்தியுள்ள தண்டனை இருக்கையில் இங்கும் தண்டனை வழங்குவானேன்....? அவை பற்றி மார்க்கமும் வலியுருத்துவானேன் ...?

 

எல்லாவற்றுக்கும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்று போய்விட முடியாதல்லவா .....? பொறுப்பு கொடுக்கப் பட்டுள்ளவர்கள் அதுபற்றி கேட்கப் பட சட்டங்கள் வரத்தேவை இல்லை .... என்ன நான் சொல்வது

 

என் கேள்வி புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

 

மனிதன் தண்டனை தர வேண்டாம் என்கிற ரீதியில் உங்கள் வாதம் இருந்தால் உலகில் பசாது ஒழிவதற்கு வழிதான் என்ன ...? 
மேலும் விளக்கம் வேண்டி
 
அன்புடன் ஹாரூன்
----------
From: நமக்குள் இஸ்லாம் Date: 2008/10/27
 
பொதுவாக எல்லா சட்டங்களையும் கருத்தில் கொண்டு இங்கு விவாதம் நடக்கவில்லை.  மதம் மாறுவது மட்டுமே இங்குள்ள தலைப்பாகும்.  ஒருவர் இஸ்லாத்தை ஏற்று பின்னர் இஸ்லாத்திலிருந்து வெளியேறினால் "அந்த செயலுக்காக" தண்டனை வழங்கும் உரிமையை இறைவன் இஸ்லாமிய அரசாங்கத்திடம் கொடுக்கவில்லை என்பதே விவாதத்தின் முக்கிய சாராம்சமாகும்.  அதற்கான ஆதாரங்களையே பார்த்து வருகிறோம்.
 
ஜி என்

----------
From: நமக்குள் இஸ்லாம் Date: 2008/10/27

மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..? - 2
 
இஸ்லாத்தை ஏற்று பின்னர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கொல்ல வேண்டும் என்ற "ஆழமான ஆய்வற்ற கருத்தால்"  இஸ்லாம் குறித்து பலர் (குறிப்பாக மாற்று மதத்தவர்கள்) தவறான நம்பிக்கையை கொண்டு விடுகிறார்கள்.  சிந்தனை ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மனிதர்களை வென்றெடுக்க வந்த ஒரு மார்க்கத்தில்,  "இஸ்லாத்தை விட்டு வெளியேறினால கொல்லப்பட வேண்டும்" போன்ற தவறான ஆளுமைச் சட்டங்கள் இருக்க வாய்ப்பே இல்லை.
 
மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முழு அளவிலான உரிமைகளில் ஒன்று இஸ்லாத்தில் கடைசி வரை நீடிப்பது சம்பந்தப்பட்டதாகும்.  அறிவார்ந்த முறையில் இஸ்லாத்தை விளங்கி ஏற்பதுதான் இஸ்லாம் மக்களுக்கு முன் வைக்கும் அறிவுரையாகும்.  விளங்கி ஏற்றப்பின் அதிலிருந்து வெளியேறினால் அது இறைவனையும் இறைவனின் மார்க்கத்தையும் கேலி செய்வதாகி விடுவதால் இதன் தண்டனையை மதம் மாறியவர்கள் மரணத்திற்கு பிறகு நிரந்தரமாக சுவைப்பார்கள்.  மாறாக "மதம் மாறியதற்காக" அவர்களுக்கு தண்டனை வழங்கும் படி இஸ்லாம் சொல்லவில்லை.  நாம் முந்தைய பதிவில் எடுத்துக் காட்டியுள்ள வசனங்களை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு அடுத்த வசனங்களையும் படியுங்கள். 

إِنَّ الَّذِينَ آمَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ آمَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ ازْدَادُواْ كُفْرًا لَّمْ يَكُنِ اللّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلاَ لِيَهْدِيَهُمْ سَبِيلاً

எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை. மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை. (அல்குர்ஆன் 4:137)
 
இந்த வசனத்தை ஆழமாக கவனிப்போம்.  ஒருவர் இஸ்லாத்தை ஏற்கிறார் பின்னர் மதம் மாறி விடுகிறார். இப்போது அவர் கொல்லப்பட வேண்டும் என்பது சட்டம் என்றால், அடுத்து அவர் ஈமான் கொள்வதற்கும், அதன் பிறகு அதை மறுப்பதற்கும்......... இப்படி எதற்கும் வழியில்லாமல் போய் விடும். 
 
நம்பிக்கைக் கொள்கிறார்
பிறகு மறுக்கிறார்
மீண்டும் நம்பிக்கைக் கொள்கிறார்
அதையும் மறுத்து வெளியேறுகிறார்
பின்னர் இறை நிராகரிப்பில் நிலைத்து நின்று மரணிக்கிறார் என்று இறைவன் சுட்டிக்காட்டுவதிலிருந்து மனிதர்களுக்கு எத்துனை சுதந்திரமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகின்றது.   'கொல்லப்பட வேண்டும்" என்ற புரிதலை இந்த வசனமும் அடியோடு மறுக்கின்றது.
 
كَيْفَ يَهْدِي اللّهُ قَوْمًا كَفَرُواْ بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُواْ أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءهُمُ الْبَيِّنَاتُ وَاللّهُ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே, அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக் கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.  (அல் குர்ஆன் 3:86)
இந்த வசனத்தையும் ஊன்றி கவனிப்போம்.   ஈமான் கொண்டு நிராகரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றால் அதை தெளிவாக இறைவன் சொல்ல வேண்டிய இடம் இது.  ஆனால் கொல்லப்படுவதைப் பற்றி சொல்லாமல் அவர்கள் நேர்வழிக்கு அப்பாற்பட்டவர்கள், இறைவன் அவர்களுக்கு வழிகாட்ட மாட்டான் என்று எச்சரிக்கிறான்.  அதாவது இஸ்லாத்தை ஏற்று பிறகு வெளியேறினால்  நீ உயிரோடு இருக்கலாம் உனக்கு வாழ்நாள் அவகாசம் அளிக்கபட்டாலும் அடுத்து நீ நேர்வழிப் பெறும் வாய்ப்பு இல்லை என்பதை இந்த வசனம் கூட்டிக் காட்டுகின்றது.
 
இந்த மார்க்கம் மனிதர்கள் மீது திணிக்கப்படுவதற்காக அருளப்படவில்லை என்பதை புரிந்துக் கொள்ள இன்னும் ஆதாரங்களைப் பார்த்து விட்டு நாம் முன்னர் எடுத்துக் காட்டியுள்ள "கொல்லப்பட வேண்டும்" என்ற ஹதீஸின் விளக்கம் என்னவென்பதை காண்போம்.

----------
From: HAROON RASHEED Date: 2008/10/28
 
நான் கேட்பதற்கு நேரடியாக உங்கள் பதில் அமையவில்லை மீண்டும் சுற்றி வளைக்கிரீர்கள் வ கூலு கவ்லன் ஸதீதா ... சொல்வதை நேரடியாக சொல்லுங்கள் என்கிறது மார்க்கம்... இஸ்லாத்தை விட்டு ஒரு தரமோ அல்லது எத்தனை தரமோ நீங்குபவருக்கு (முர்த்ததுக்கு ) இஸ்லாம் கொலை தண்டனை விதித்துள்ள்தா இல்லையா...?
 
இங்கு மழுப்புவதற்கு என்ன இருக்கிறது ...? யாருக்கு அஞ்சவேண்டும்..? எந்தக்காலத்துக்கு அருளப் பட்டது ?
 
எந்த சூழ்லில் கொலை தண்டனை  அமல் படுத்த வேண்டும் ... அந்த சட்டத்தை நிறைவேற்ற அருகதை உடையவர் எவர் ...?  அரசாங்கமா அல்லது தனி ஒரு முஸ்லிமுக்கு அந்த அதிகாரம் உள்ளதா..? என்பதில் வேண்டுமானால் கருத்து வேறுபாடு இருக்கலாம் என்பது என் கருத்து ...
 
விவாதத்துக்கு ஒத்துழைக்க ஒத்தக் கருத்துடையவர்கள் பங்களிக்க அழைக்கிறேன் நான் மெத்தப் படித்தவனில்லை ஆயினும் ஒரு விடயம் தெளிவாக்கிக் கொள்ள விழைபவன் என் கருத்து மார்க்கத்துக்கு முரணாக அமைந்தால் நான் அந்த்தக் கருத்தை விளங்கிக் கொண்ட அந்தக் கணம் முதல் விட்டுவிட்டு சரியான கருத்தின் பால் திரும்புவதை விரும்புகிறேன் .....

----------
From: நமக்குள் இஸ்லாம் Date: 2008/10/29

தெளிவாகவே சொல்லி வருகிறோம். நாம் இதுவரை எடுத்துக் காட்டியுள்ள வசனங்களிலிருந்து "இஸ்லாத்தை விட்டு வெளியேறினால் கொல்லப்பட வேண்டும்" என்பது சட்டமல்ல என்று விளங்கவில்லையா...  
 
கொல்லப்படத்தான் வேண்டும் என்று யாராவது சொன்னால் அதற்கான ஆதாரங்களை அவர்கள் முன் வைக்கட்டும்.
 

ஜி என்

----------
From: நமக்குள் இஸ்லாம் Date: 2008/10/29
 
இஸ்லாத்தை ஏற்று பின்னர் அதிலிருந்மு விலகியவர்களை கொல்ல வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை சொல்லி வருகிறோம்.   இதுவரை நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்கள் அனைத்துமே இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கொல்ல வேண்டும் என்ற கருத்தை மறுக்கின்றது.
 
அடுத்த வசனம்.
 
لاَ إِكْرَاهَ فِي الدِّينِ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது (அல்குர்ஆன் 2:256)
 
மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படையை விளக்கும் வசனங்களில் இதுவும் ஒன்று.
 
வழிகேட்டிலிருந்து நேர்வழி பிரித்தறிவிக்கப்பட்டு தெளிவாகி விட்டதால் இந்த மார்க்கத்தில் எந்த நிர்பந்தமுமில்லை என்பது இந்த வசனம் முன் வைக்கும் அறிவார்ந்த வாதம்.
 
இஸ்லாத்திலிருந்து வெளியேற நினைக்கும் ஒருவரை "நீ இஸ்லாத்திலிருந்து வெளியேறினால் கொல்லப்படுவாய்"  என்று மிரட்டுவது அவரை நிர்பந்தப்படுத்தி இஸ்லாத்தில் வைக்கும் காரியமாகும். பிறரது மிரட்டலுக்கு பயந்து,  கொல்லப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் இஸ்லாத்தில் இருப்பவர்களால் இஸ்லாத்தின் கோட்பாடுகளையும், சட்டங்களையும் எப்படிப்பின்பற்ற முடியும்.  
 
உயிருக்கு பயந்து நிர்பந்தமான நிலையில் இஸ்லாத்தின் உள்ளே இருக்கும் ஒருவரிடம் இஸ்லாம் எந்த மாற்றத்தையும் செய்து விடப் போவதில்லை.    நேர்வழியையும், வழிகேட்டையும் பிரித்தறிவித்து விட்டு இஸ்லாத்தில் நிர்பந்தமில்லை என்று இறைவன் குறிப்பிட்டு விட்டதால் அவன் மார்க்கத்தில் இருந்துதான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தும் உரிமை ஒருவருக்கும் இல்லை.
 
மார்க்கத்தில் நிர்பந்தமில்லை என்ற சட்டமே ஒருவர் வெளியேறினால் வெளியேறிக் கொள்ளலாம் என்ற அனுமதியை முன் வைக்கின்றது. அவரை கொல்லும் உரிமையை இஸ்லாம் யாருக்கும் வழங்கவில்லை.
 
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக நடித்துக் கொண்டு இஸ்லாத்திற்கு இடையூறு செய்துக் கொண்டிருந்தவர்கள் இருக்கத்தான் செய்தார்கள் - நயவஞ்சகர்கள் - என்று இஸ்லாம் இவர்களை அடையாளப்படுத்துகின்றது.  இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஒருவரைக் கூட நபி(ஸல்) அவர்கள் "கொன்றார்கள்" என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
 
எனவே இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
 
அப்படியானால்,
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறிவர்களைக் கொல்லுங்கள் என்று நாம் ஆரம்பத்தில் எடுத்துக்காட்டிய ஹதீஸின் விளக்கம் தான் என்ன..? அடுத்துப் பார்போம் இறைவன் நாடட்டும்.
 --
ஜி என்

----------
From: Hajju Muhammed Abul Hasan Date: 2008/10/29

நண்பரே!
நீங்கள் பல வசனங்களை எடுத்துக் காட்டுகிறீர்கள், நல்லதுதான்.
நீங்கள் காட்டிய வசனங்கள் அனைத்தும், எவர்களுக்காக இறங்கியது, அவர்கள் பற்றி நபி (ஸல்) அவர்களினடம் என்ன கருத்து இருந்தது என்பதை தயவு செய்து தெளிவுபடுத்துங்கள். மிக்க பயனுள்ளதாய் இருக்கும்.
நற்புக்குரிய அபூ அஸ்ஸாம்.

----------
From: HAROON RASHEED Date: 2008/10/29
 
நீங்கள் ஆதியில் சுட்டிக் காட்டியிருந்த அந்த ஹதீசுக்கான விளக்கம் குறித்த கட்டுரைக்காக காத்திருக்கிறேன் ...? அல்லாஹ் உங்களின் பொறுப்பான நிலைப்பாடு மன நிறைவை தருகிறது. சலிக்காமல் பதில் எழுதுகிறீர்கள் அல்லாஹ் உங்களுக்கு நிறைய ஆற்றலும் ஆயுளும் தந்து அருள்வானாக
நட்புடன் ஹாரூன் 
 
----------
From: நமக்குள் இஸ்லாம் Date: 2008/10/30

நாம் எடுத்துக் காட்டி வரும் அனைத்து வசனங்களும் மதினாவில் இறங்கியதாகும்.
 
ஒரு வசனம் இருவேறு கருத்துக்கிடமில்லாமல் தெளிவாக ஒரு கருத்தை சொல்லும் போது, இது எங்கு இறங்கியது? யாருக்கா இறங்கியது?? என்ற ஆராய்ச்சியே நமக்கு தேவையில்லை.   
 
இறைவன் ஒருவன் தான் என்ற வசனமும்,  ஈஸா இறைவனின் மகனல்ல என்ன வசனமும் தெளிவான கருத்தை முன் வைக்கும் வசனங்களாகும்.  இது எங்கு யாருக்கு இறங்கியது என்று ஆய்வு செய்து அந்த கருத்தை ஏற்க வேண்டும் என்ற ஆய்வில் நாம் இறங்கினால் ஏராளமான வசனங்களை யூத கிறிஸ்த்தவர்களோடும், மக்கத்து காபிர்களோடும் நிறுத்தி வைக்கும் மனபாங்கு ஏற்பட்டு விடும் (அல்லாஹ் பாதுகாப்பானாக) 
 
எனவே குர்ஆன் தெளிவாக ஒரு கொள்கையையோ,  சட்டத்தையே முன் வைக்கும் பொது அது பொதுவாக எல்லோருக்கும் , எல்லா காலகட்டத்திற்கும் உரியதாகி விடும் என்பதை நாம் விளங்கி்க் கொள்ள வேண்டும்.

ஜி என்

----------
From: நமக்குள் இஸ்லாம் Date: 2008/10/30
 
மதம் மாறினால் மரணதண்டனை பொது சட்டமா? ஹதீஸ்களின் விளக்கம் என்ன..? - 4
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று போதுவான ஒரு கருத்து முன் வைக்கப்படும் போது "இது ஒரு முரட்டு மார்க்கம்" என்ற பழிசொல்லிலிருந்து இஸ்லாத்தை காப்பாற்ற முடியாமல் போய் விடுகின்றது.
 
உபதேசம், பிரச்சாரம் செய்வதில் கூட நளினத்தை, இலகுவை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு மார்க்கத்தில் மனிதனின் சிந்தனை சுதந்திரமும், வாழ்வியல் சுதந்திரமும் வலுக்காட்டாயமாக அகற்றப்பட்டு இருக்குமா என்பதை "கொல்லப்பட வேண்டும்" என்ற கருத்துள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.
 
மதம் மாறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு குர்ஆனிலிருந்து எந்த ஒரு வசனத்தையும் முன் வைக்க முடியாதவர்கள் - கொல்லப்படுவதை மறுக்கும் வசனங்களையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் - ஹதீஸ்களின் பக்கம் திரும்பி "ஹதீஸ்களில் ஆதாரம் இருக்கின்றது" என்று தங்கள் வாதத்தை வைக்கத் துவங்கி விடுகின்றார்கள்.
 
 ஹதீஸ்களிலிருந்து ஒரு வாதத்தை நாம் எடுத்து வைக்குமுன் ஒன்றை மிக ஆழமாக நம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.
 
நபி(ஸல்) அவர்கள், குர்ஆனை விளக்குவதற்கும், குர்ஆனாக வாழ்வதற்கும் தான் அனுப்பப்பட்டார்களே தவிர குர்ஆன் வேறு, தான் வேறு என்று வாழ்ந்துக் காட்டுவதற்காக அல்ல.    நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது என்று அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் அறிவிப்பு "நபி(ஸல்) குர்ஆன் விளக்கவுரையாகவே வாழ்ந்துள்ளார்கள்" என்பதை ஐயத்திற்கிடமின்றி சொல்லி விடுகின்றது. எனவே குர்ஆனுக்கு முரண் பட்டு ஒரு கருத்தை நபி(ஸல்) சொல்லி இருப்பார்கள் என்று நாம் கற்பனைக் கூட செய்யக் கூடாது.
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதை நபி(ஸல்) பொதுவான கருத்தாக வைத்திருக்க வாய்ப்பேயில்லை. ஏனெனில் அந்த கருத்தை குர்ஆன் அடியோடு மறுக்கின்றது. 
 
அப்படியானால் கொல்லப்பட வேண்டும் என்ற ஹதீஸின் நிலவரம் என்ன..?
 
பார்போம் இன்ஷா அல்லாஹ்.
ஜி என்

----------
From: HAROON RASHEED Date: 2008/10/30

கிட்டத்தட்ட தாங்கள் ஒரு கில்லர் சீரியல் தொடரை இயக்கும் இயக்குனர் போல இதோ இதோ என்று அலைக் கழிக்கிறீர்கள் .....

 

கால காலமாக ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாத்தின் நற் கொள்கைகளின் தாக்கத்தினை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் பொருமிக் கொண்டிருப்பதை எல்லாம் போட்டு மிதித்து பொங்கிப பிரவாகித்து தன் வழியில் சிறப்பாக மிடுக்குடன் வழிநடத்திக் கொண்டும் நம்மை நலம் வாழ வழி காட்டிக் கொண்டும் இஸ்லாம் இருந்து வருகிறது ...

 
அடிப்படை வாதிகள் .... அழிவுக் கொள்கைக்கு சொந்தக் காரர்கள் .... காட்டு மிராண்டிக் கொள்கைகளை உடையவர்கள் என்றெல்லாம் இல்லாத் ஒன்றை சொல்லிச்சொல்லி இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வந்த ஆனானப் பட்ட எத்தனையோ மக்களெல்லாம் இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம் என்று சாட்சியம் கூறிக்கொண்டிருப்பது போதும் இஸ்லாம் ஓர் வுயரிய கொள்கைகளின் தாயகம் என்பதற்கு…..

 

பிறரது மெச்சுதலுக்கும் ..... அடாடா இதை சொன்னால் வெறுத்துப் போய்விடுவார்களே அப்புறம் இஸ்லாத்துக்கு வரமாட்டார்களே ... என்றெல்லாம் கவலை கொண்டு ஒடுங்கிப் போய்விடும் மார்க்கம் அல்ல இஸ்லாம் ஒன்றை சொன்னால் உறுதிபட அழுத்தம் திருத்தமாக ஆணித்தரமாக   அழகுபட  சொல்லும் அற்புத  மார்க்கம்  இஸ்லாம் . நளினமாக  சொல்லவேண்டிய  இடத்தில்  நளினமாகவும்  எச்சரிக்க  வேண்டிய இடங்களில் எச்சரித்தும்  மனித சமுக  நலன் ஒன்றையே  குறிக்கோளாக  கொண்டு சொல்லும் மார்க்கம்  இஸ்லாம் 

 
கண்டிக்க  வேண்டிய விடயங்களை கண்டிக்காமல்  நளினமும்  நயம்படவும்  உரைத்துக்  கொண்டிருந்தால்  ..... சரி சரி என்று வெண்ணெய்  தடவி  விட்டு போய்விடுவார்கள்  உதாரணத்துக்கு கிட்டத்தட்ட  அழிந்து போய்விட்ட சமண  மதத்தை  பார்த்துக்  கொள்ளுங்கள் ......
 
திருடினால் கரத்தை வெட்டுங்கள் என்று சொன்னால் அதில் கூட ஒரு சமுக நலன் இருக்கும் என்பதை சிந்திக்க மறுப்பவர்களின் சொர்க்களுக்கெல்லாம் அச்சப் பட்டுக் கொன்டிருந்தால் சமுக அக்கறை இல்லாதவர்களின் பட்டியலுக்குத்தான் சுய நலவாதிகளின் பட்டியலுக்குத்தன் போக நேரும்.

 

அதுபோலத்தான் களை எடுக்கப் பட வேண்டிய ஒரு விஷயம் ஒரு குறிப்பிட்ட சாராரின் கோபத்தை கிளறிவிடும் என்று சிந்தித்துக் கொன்டிருந்தால் பெரும் பான்மை மக்களை தன்னகம் கொண்டிலங்கும் பூமி ப்பந்து முழுவதும் பாசாதுப் பாக்டீரியா படர்ந்து பெருத்த நாசம் உண்டாகிட வழி சமைக்கும். 

 

சாதாரண உலகியல் இன்பம் துய்த்திட விளையும் அயோக்கியர்கள் தங்கள் டாலர்களின் மதிப்பு குறைந்து போகாதிருக்க ஒரு பெரும் நாட்டை அதில் வாழும் லட்சோப லட்சம் மக்களை நாசம் செய்கிறான் .... அதனை தட்டிக் கேட்க வேண்டாம் விமர்சிக்கக் கூட அச்சப்பட்டுக் கொண்டிருந்த மக்கள் வாழும் காலமிது. அரசியல் பேச வரவில்லை நான்

 
ஒரு மார்க்கம் musilmukku மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழி காட்டும் மார்க்கமாக என்றென்றும் திகழ வேண்டுமென்றால் இவ்வாறுதான் பலப்பல்  விமர்சனங்களால் பரிசோதிக்கப் படும் .....! அது இயல்பு ... இங்கு அல்லாஹ்வைத்தவிர உள்ள மற்றவைகளுக்கு அஞ்சும் மனோபாவம் நம்முள் விளைந்திடலாகாது ..... புரிந்து கொள்கிறோம் பேர்வழிகள் என்று சொல்லிக் கொண்டு தவறான வழிகாட்டுதல்களை முன்வைப்பவர்கள் இறைவன் முன் நின்று பதில் சொல்லவேண்டும் என்பதினை நினைவுறுத்திக் கொள்ளவேண்டும் ....நான் பதில் வேண்டி  காத்திருக்கிறேன் ....
 
நட்புடன் ஹாரூன்

----------
From: நமக்குள் இஸ்லாம் Date: 2008/11/1
 
மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..? ஹதீஸ்களின் விளக்கம் என்ன..? - 5
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொது சட்டமல்ல.  இஸ்லாத்தை விட்டு வெளியேறினால், இஸ்லாதத்தை விட்டு வெளியேறியதற்காக எந்த இஸ்லாமிய அரசாங்கமும் மரண தண்டனை விதிக்காது - விதிக்கக் கூடாது.
 
நபி(ஸல்) காலத்தில் இத்தகைய எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை.  அப்படியானால் தங்கள் மதத்தை மாற்றிக் கொண்டவர்களைக் கொல்லுங்கள் என்று ஹதீஸ் வந்துள்ளதே என்ற சந்தேகம் இப்போது மி்ச்சமிருக்கின்றது.
 
‏ابن عباس ‏ ‏فقال لو كنت أنا لم أحرقهم لنهي رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏لا تعذبوا بعذاب الله ولقتلتهم لقول رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏من
بدل دينه فاقتلوه
 
 
''எவர் தன் மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவரைக் கொன்று விடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ் - புகாரி)
........................................
 
‏قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث ‏ ‏الثيب ‏ ‏الزاني والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعة
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

''அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்'' என உறுதிமொழி கூறிய எந்த முஸ்லிமான மனிதரையும் மூன்று காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.

1. ஒரு மனிதரைக் கொலை செய்வதற்குப் பதிலாகக் கொலை செய்வது.

2. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன்.

3. ஜமாஅத் எனும் சமூக கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமது மார்க்கத்தை கைவிட்டவன் (அப்தல்லாஹ்  - முஸ்லிம்)
 
 
.............................................
 
‏أن رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏قال ‏ ‏لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث خصال زان ‏ ‏محصن ‏ ‏يرجم ‏ ‏أو رجل قتل رجلا متعمدا فيقتل أو رجل يخرج من الإسلام يحارب الله عز وجل ورسوله فيقتل أو يصلب أو ‏ ‏ينفى من الأرض
 
''மூன்று காரணங்களில் ஏதேனும் ஒன்றுக்காகவே தவிர, முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன் கல்லெறிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றேக் கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆய்ஷா (ரலி) நஸயி)
 
 
மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்கு அந்தக் கருத்துள்ளவர்கள் பொதுவாக எடுத்துக் காட்டும் ஆதார்ஙகள் இவைதான். இந்த ஆதாரங்களை நாம் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.  ஹதீஸ் வாசகங்களைப் பொருத்தவரை ஒன்று இன்னொன்றுக்கு விளக்கவுரையாக அமையும் என்பதால் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துதான் நாம் அதன் கருத்தையோ சட்டங்களையோ விளங்க வேண்டும்.
 
புகாரி, முஸ்லிமில் இருந்து நாம் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸ் பொதுவாக இருந்தாலும் நஸயியில் வரும் ஹதீஸ் கூடுதல் விபரங்களைக் கொடுக்கின்றது.
 
//இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான்//.
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது மட்டும் ஒருவன் கொல்லப்படுவதற்கான விதியல்ல.  வெளியேறிய அவன் முஸ்லிம்களின் கூட்டமைப்புக்கு எதிராக (அதாவது ஆட்சி அதிகாரத்துக்கு எதிராக) செயல்பட்டு, குழப்பங்களை விளைவித்து, ஒருநாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடக்கும் போது, அப்போது பிடிப்பட்டாலே இந்த தண்டனை அவன் மீது விதிக்கப்படும்.  இதை தெளிவாக்கும் விதமாகவே "அல்லாஹ்விடத்திலும் அவன் தூதரிடத்திலும் போர் செய்பவன்" என்று நபி(ஸல்) குறிப்பிடுகிறார்கள்.
 
நாட்டின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்பது அரசியல் நிர்ணயம். அதற்கு எதிராக குழப்பம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகெங்கும் இருக்கும் நியதி.
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதுமட்டுமில்லாமல் அங்கு குழப்பம் விளைவிக்க முயல்பவர்கள் குறித்தே மேற்கண்ட கட்டளைகள் வந்துள்ளன. 
 
மதம் மாறியவர்கள் அதற்காக கொல்லப்பட வேண்டும் என்பது சட்டமாக இருந்தால் நாடு கடத்தப்பட வேண்டும் (நஸயி)  என்று நபி(ஸல்) கூறி இருக்க மாட்டார்கள்.  நாடு கடத்தப்பட்டால் அவன் அங்கும் காஃபிராகத்தான் வாழ்வான். 
 
நாடு கடத்தப்படுதல் என்பதே பொதுவாக ஒரு நாட்டில் குழப்பம் விளைவிக்கும் முக்கியஸ்தர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.  "நாடுகடத்தப்பட வேண்டும்" என்று நபி(ஸல்) குறிப்பிட்டதிலிருந்து கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் மதம் மாறியதற்காக அல்ல மாறாக மதம் மாறி உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்கே என்பது தெளிவாகின்றது. 
 
நீங்கள் ஒரு அமீருக்கு (அதிகாரம் உள்ளவருக்கு) கீழ் ஒருங்கிணைந்து கட்டுப்பட்டிருக்கும் போது அதில் குழப்பம் ஏற்படுத்த முனைபவர்களை - பிரிவினையை உருவாக்குபவர்களைக் கொல்லுங்கள் என்றும் பிறிதொரு அமீராக தன்னை அறிவிப்பவர்களில் பிந்தியவரை கொல்லுங்கள் என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.
 
سمعت رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏يقول ‏ ‏من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن ‏ ‏يشق عصاكم ‏ ‏أو يفرق جماعتكم فاقتلو
 
 
 
قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏إذا ‏ ‏بويع ‏ ‏لخليفتين فاقتلوا الآخر منهما
 
 
ஹதீஸ்களை கவனமாக ஆராயும் போதும், அனைத்து ஹதீஸ்களையும் ஒருங்கிணைத்து சிந்திக்கும் போதும்  இந்த முடிவுக்கே நம்மால் வர முடிகின்றது.
 
குழப்பம் ஏற்படுத்துதல் என்று ஒன்று நடக்கவில்லை என்றால் அவரும் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக அவர்கள் கொல்லப்படக் கூடாது என்பதற்கான குர்ஆன் வசனங்களை நாம் முந்தைய தொடர்களில் பார்த்தோம்.
 
குழப்பம் கொலையைவிட கொடியது.
 
குழப்பம் கொலையை விட பெரியது என்று குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ள போது குழப்பம் செய்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது சாதாரண ஒன்றுதான் என்பதை விளங்கலாம்.    குழப்பம் ஏற்படுத்தும் தனி மனிதனின் உயிரை விட நாட்டு மக்களின் நிம்மதியும்,  அமைதியும் முக்கியம் என்பதால், இஸ்லாமிய அரசுகள் இதை செயல்படுத்தும்.
 
அல்லாஹ் எல்லாவற்றையும் நுணுககமாக அறிபவன் என்பதை நம்புகிறோம்.
 
(குறிப்பு: இந்த தலைப்பு நிறைவுக்கு வருகின்றது.  இது குறித்த சந்தேகங்கள் மேலதிக விளக்கங்கள் இருந்தால் மட்டும் வாசகர்கள் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம்)
 
 
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com